2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ள நிலையில் முக்கிய கட்சிகளை தங்கள் வசம் இழுக்க திமுக திட்டம் தீட்டி வருகிறது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. SIR தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் தேமுதிக பங்கேற்றது கூட்டணிக்கு அட்சாராமா என கேள்வி எழுந்துள்ளது. தேமுதிகவை பொருத்தவரை இதுவரையில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் நாங்கள் யாருடன் கூட்டணியில் இணைவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



