தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ (Sigma) திரைப்படம் அக். 2 இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பலமுறை தள்ளிப்போன இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் திரையரங்கிற்கு நேரடியாக வந்து அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்ற முதல் நாள் முதல் காட்சி திரையிடலின் போது, ஜேசன் சஞ்சய்யை உற்சாகப்படுத்த அவரது தாயார் சங்கீதா சொர்ணலிங்கமும், தங்கை திவ்யா சாஷாவும் நேரில் வருகை தந்தனர். ரசிகர்களால் அரங்கம் நிறைந்திருந்த சூழலில் அவர்கள் இருவரும் ஜேசனின் முதல் திரைப்படக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். முதலமைச்சர் விஜய் தனது அரசுப் பணிகள் காரணமாக முதல் நாள் முதல் காட்சியைக் காண வரவில்லை என்றபோதிலும், அவர் விரைவில் இத்திரைப்படத்தைப் பார்ப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்கிற்கு வந்த சங்கீதா பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்த நிலையில், தங்கை திவ்யா சாஷா ‘சிக்மா’ திரைப்படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சிறப்புமிக்க கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து தனது அண்ணனுக்கு ஆதரவு தெரிவித்தார். அரிதாகப் பொதுவெளியில் தோன்றும் திவ்யாவின் இந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.
படம் வெளியாவதற்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய் குறித்துப் பேசுகையில், அவர் வழக்கமாக மிகவும் அமைதியான மனிதர் என்றும், ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்ல சில வினாடிகள் எடுத்துக்கொண்டு நிதானமாக யோசித்துத் தான் பதிலளிப்பார் என்றும் கூறினார். மேலும், திரைப்படத்தைப் பார்த்துப் பகுப்பாய்வு செய்ய அவருக்குச் சற்று நேரம் தேவைப்படும் என்றாலும், நிச்சயமாக அவருக்கு இந்தப் படம் பிடிக்கும் என்றும், அவர் தன் மீது பெருமைப்படுவார் என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
ஜேசன் சஞ்சய்யின் திரைப் பயணத்திற்குத் திரைத்துறையினரிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “உங்கள் வருகை நல்வரவாகட்டும் சஞ்சய்… குட்டி சஞ்சய் இப்போது ஒரு இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை!” என வாழ்த்தியிருந்தார். அதேபோல் நடிகர் கார்த்தி, “நீ சினிமாத்துறையைத் தேர்ந்தெடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது; உனக்கு மக்களின் அன்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
‘சிக்மா’ திரைப்படம், நிதிப் புதையலைத் தேடும் ரவுடி வானொலித் தொகுப்பாளரான குருவின் கதையைப் பேசுகிறது. தனது வாழ்க்கையில் நடக்கும் ஒரு துரோகத்தால் சிக்கலில் மாட்டும் குரு, கொட்லபாடி வீரைய்யா ரெட்டியின் 500 கோடி ரூபாய் சட்டவிரோத நெட்வொர்க்கை எதிர்த்துத் தனக்கு இழப்பீட்டை மீட்க நடத்தும் போராட்டமே இப்படத்தின் மையக்கமையாகும். இதில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், சிவ பண்டிட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



