திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சிக்குபோல கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் என்ற ஊமைச்சாமி (60). விவசாயியான இவர், தனது தோட்டத்து வீட்டில் மனைவி சுப்புலட்சுமி (58) மற்றும் ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் மகன் முத்தையா (30) ஆகியோருடன் வசித்து வந்தார். முத்தையாவுக்கும் அவரது மனைவி நந்தினிக்கும் (28) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு நந்தினி பிரிந்து சென்றிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்புதான் முத்தையா சமாதானம் பேசி அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த முத்தையா, மீண்டும் நந்தினியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்க முயன்றுள்ளார். நந்தினி அங்கிருந்து ஓடவே, இதனைப் பார்த்துப் பதறிய தந்தை பெருமாள் மகனின் செயலை கண்டித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த முத்தையா, கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து தந்தை பெருமாளை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெருமாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்ற முத்தையா, “என் பொண்டாட்டிதான் அப்பாவை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டாள்” என்று கூறி பழியை மனைவி மீது போட்டு நாடகமாட முயன்றுள்ளார்.
எனினும், வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கும் மருத்துவமனைக்கும் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில், மதுபோதையில் முத்தையாதான் தந்தையை கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, முத்தையாவை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.



