பெண்கள் தங்களது வேலை மற்றும் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், குறிப்பாக ஐடி மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் பல பெண்கள் திருமணத்தைத் தங்களது தொழில் வளர்ச்சிக்கு ஒரு தடையாகக் கருதுகின்றனர். இதனால் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவும் முடிவு செய்கின்றனர். குடும்பங்களில் பாரம்பரியமாக இருந்து வரும் பாலின பாத்திரங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, பெண்கள் வீட்டை நிர்வகிப்பது போல ஆண்களும் ‘இல்லத்தரசர்களாக’ மாறுவதைச் சமூகம் ஏற்றுக்கொண்டு, அதனை இயல்பாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, “இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால், இல்லத்தரசர்களும் இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பாக மாறட்டும்” எனத் தெரிவித்தது. மேலும், “திருமணம் மற்றும் குடும்பம் என்ற கட்டமைப்பைப் பாதுகாக்க இது பெரிதும் உதவும் என்பதே எங்களது கருத்து. ‘ஹோம் மேக்கர்’ என்ற வார்த்தை எந்தவொரு குறிப்பிட்ட பாலினத்தையும் சாராத பொதுவான வார்த்தையாகும்” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்திய சமூகத்தில் குடும்பம் வகிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்திய உயர் நீதிமன்றம், “நவீன மேற்கத்திய சமூகங்களைப் போல தனிநபர் சுதந்திரம் அல்ல, ‘குடும்பம்’ என்பதே பாரதிய கலாச்சாரத்தின் அடிப்படை அலகாக உள்ளது” எனத் தெரிவித்தது. பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து கோரிய மருத்துவர் தம்பதி ஒருவருக்கு விவாகரத்து வழங்கிய வழக்கின் போதே நீதிபதிகள் இந்த முக்கிய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
காலப்போக்கில் திருமண உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசிய நீதிபதிகள், “பாரம்பரியமாக குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைக் கவனிப்பது கணவனின் பொறுப்பாகவும், வீட்டை நிர்வகிப்பது மனைவியின் பொறுப்பாகவும் இருந்து வந்தது. இந்த இரண்டு பொறுப்புகளுக்கும் சமமான அங்கீகாரமும் மரியாதையும் அளிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த அரை நூற்றாண்டாக இந்த நிலை மெல்ல மாறி வருகிறது. பெண்களும் அதிக அளவில் வேலை மற்றும் தங்களது தொழில் சார்ந்த இலக்குகளை நோக்கிச் செயல்படத் தொடங்கியுள்ளனர்” என்றனர்.
மாறிவரும் இந்தப் போக்கு, உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் குறிப்பாக ஐடி துறையில் இதன் விளைவுகள் குறித்தும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். “வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் திருமணம் என்பது தங்களுக்குச் சாதகமான ஒரு விஷயமாகத் தெரிவதில்லை. திருமணம் தங்களது தொழில் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் என நினைப்பதால், அதனைத் தவிர்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் திருமணம் செய்து கொள்ளாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கணவன்மார்கள் வீட்டை நிர்வகிக்கும் ‘ஹோம் மேக்கர்களாக’ மாற முன்வந்தால் மட்டுமே, இந்தச் சூழலைச் சரிசெய்ய முடியும்” என நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது.
அதேவேளையில், வீட்டை நிர்வகிப்பதில் உள்ள கண்ணியத்தையும் மதிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டிய நீதிபதிகள், “முன்பெல்லாம் பெண்கள் தங்களை ‘இல்லத்தரசி’ என்று பெருமையோடு அடையாளப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இப்போதுள்ள சூழலில் சிலர் தங்களை அவ்வாறு சொல்லிக்கொள்ளத் தயங்குவதைப் பார்க்க முடிகிறது” எனவும் தங்களது அவதானிப்பைப் பதிவு செய்தனர்.



