திருவாரூர் அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹாஜி முகமது. மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது ரபிக் (வயது 28). இவருக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில், மனைவி புதுக்கோட்டையில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருக்கிறார். இதனால் மனைவியை பார்க்க நேற்று முன் தினம் இரவு காரில் முகமது ரபீக் சென்றுள்ளார்.
மனைவியை பார்த்துவிட்டு நேற்று இரவு மீண்டும் திருவாரூருக்கு புறப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் நள்ளிரவு 2.30 மணியளவில் முகமது ரபீக் காரில் வந்துகொண்டிருந்தார். நாகை பைபாஸ் சாலை பகுதியில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையின் தடுப்பு சுவரில் மோதிய கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காருக்குள் சிக்கிக்கொண்ட முகமது ரபிக்கால் வெளியே வர முடியவில்லை.
தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு படையினர் உடனடியாக காரில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் காருக்குள் பிணமாக உடல் கருகிய நிலையில் முகமது ரபீக் மீட்கப்பட்டார்.
அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது, புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
Read more: இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 55.1 சதவீதமாக அதிகரிப்பு…!



