மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவரை தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று நான்கு மாணவிகள் தாக்கியதாகவும், அங்கு அவரை மிரட்டி ஒரு ஆண் மாணவருடன் தொடர்பில் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு விவரம் தெரியவந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் ஆண் மாணவர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த ஆண் மாணவரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மற்றொரு மாணவி அவரை தனியாக சந்திக்க அழைத்துள்ளார்.
இதனை நம்பி சென்ற மாணவியை, அந்த மாணவி ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று தனிமையான காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே முகத்தை மறைத்தபடி மேலும் மூன்று மாணவிகள் இருந்துள்ளனர்.
நான்கு பேரும் சேர்ந்து மாணவியை குச்சியால் தாக்கி, காலால் உதைத்ததாகவும், அவரை மிரட்டியதாகவும் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட ஆண் மாணவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதுடன், அவருக்கு வீடியோ கால் செய்து பேசுமாறும் வற்புறுத்தியதாக புகார் கூறுகிறது.
தாக்குதலுக்குப் பின்னர், தங்களது நிபந்தனைக்கு மாணவி இணங்கிய பிறகே அங்கிருந்து செல்ல அனுமதித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் நிலையில், அச்சம் காரணமாக மாணவி உடனடியாக குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாகவும், அதனை மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்ததன் மூலம் சம்பவம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து 38 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 11ஆம் தேதி கோல்கவான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவத்தின் பின்னணி, தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவிகள் மற்றும் தொடர்புடைய ஆண் மாணவர் குறித்த தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: 22 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை… 2 ரயில்வே போலீசார் உட்பட 6 பேர் மீது வழக்கு!



