திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி., காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு தேசிய அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் தொடங்கும் சிறப்புக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட முன்மொழிவுகளுடன், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளையும் மத்திய அரசு முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, தேவையான ஆதரவு கிடைக்காததால் அது நிறைவேறவில்லை.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வந்த திமுக, தற்போது திருத்தப்பட்ட மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 28-ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கனிமொழி தலைமையிலான திமுக எம்.பி.க்கள் குழு சந்தித்துப் பேசியது. அப்போது, கட்சியின் முடிவு மற்றும் மசோதா தொடர்பான நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கார்கே – கனிமொழி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?
இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கனிமொழி டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக எடுத்துள்ள முடிவு மற்றும் அதற்கான காரணங்களை கார்கேவிடம் கனிமொழி எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும் சூழலில் இந்தச் சந்திப்பு கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
Also read:கைது… சிறை… இப்போது ஜாமின்! தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வழக்கில் அடுத்த திருப்பம்!



