கரூர் சம்பவம் திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது என கூறி, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்’ என மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
தவெக தலைவர் விஜய் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பள்ளி குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம், விபத்துபோல தெரியவில்லை. திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. பிரச்சாரம் நடந்துகொண்டு இருந்தபோது, திடீரென எங்கிருந்தோ கற்கள் வீசப்பட்டன. போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். நடந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என தவெக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.
கரூரை சேர்ந்த செந்தில்கண்ணன் என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரன் நேற்று நீதிபதி செந்தில்குமார் முன்பு ஆஜராகி, ‘‘கரூர் சம்பவம் குறித்த முழுமையாக விசாரணை நடந்து, இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்பது உறுதியாக தெரியும் வரை தவெக சார்பில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என முறையிட்டார். இந்த வழக்கை மாலை 4.30 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தார். ஆனால், மனு தாக்கல் செய்யதாமதம் ஆனதால், நேற்று மாலை விசாரணை நடைபெறவில்லை. அதேபோல, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில் வழக்கறிஞர் வெங்கட்ராமன், ‘‘கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று நீதிபதி செந்தில்குமாரிடம் முறையீடு செய்தார். இது பொதுநல வழக்காக இருப்பதால், தான் விசாரிக்க இயலாது என்று கூறி, வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.