கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் தொடர்ச்சியாக 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், சிலரை போன் மூலம் அழைத்தும், நேரில் சென்றும் அக்டோபர் 30-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், நிறுவனம் நடத்தி வருபவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அக்டோபர் 31-ம் தேதி மற்றும் நவம்பர் 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் வேலுசாமிபுரத்தில் சாலையை சிபிஐயினர் அளவீடு செய்தனர். நவம்பர் 4, 5-ம் தேதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸார், நவம்பர் 6-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் 6 நாட்கள் விசாரணை நடத்தினர். தவெக வழக்கறிஞர் அரசு உள்ளிட்டோர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை, சிபிஐயை கேட்ட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து 2 நாட்களாக விளக்கம் அளித்தனர்.
கடந்த 4 நாட்களாக விசாரணைக்கு யாரும் ஆஜராகாத நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் கரூர் சுற்றுலா மாளிகைக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ், வழக்கறிஞர் அரசு ஆகியோர் 3 கார்களில் ஆஜராகினர். கரூர் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்தும் நடைபெற்ற சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவர்களிடம் தொடர்ச்சியாக 10 மணி நேரம் விசாரணையானதும் நடைபெற்றுள்ளது.



