கேரளாவை சேர்ந்த கஸியா லிஸ் மெஜோ என்ற 19 வயதே ஆன இளம்பெண், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 மகுடத்தை சூடினார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட இறுதிப்போட்டியில், கேரளாவின் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான சட்டக்கல்லூரி மாணவி கஸியா லிஸ் மெஜோ (Kaziah Liz Mejo) ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்றுள்ளார். 52 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில், அவருக்கு முந்தைய வெற்றியாளரான மனிகா விஸ்வகர்மா மகுடம் சூட்டினார்.
2007 ஆம் ஆண்டு பிறந்த இவர், அபுதாபியில் வளர்ந்து தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மெஜோ ஆபிரகாம் மற்றும் சுஜா மெஜோ தம்பதியின் மகளான இவர், கொச்சியில் வசித்து வருவதுடன் தற்போது பெங்களூருவில் சட்டம் பயின்று வருகிறார். 2012-ல் இருந்தே பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்று வரும் இவர், பல கலைத்திறன்களை வளர்த்துக்கொண்டுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துகொண்டர் கஸியா, ஒரு காலத்தில் தனது புகைப்படங்களை ஃபில்டர்கள் இல்லாமல் பார்க்கத் தயங்கியவர் கஸியா. தனது தோற்றம் மற்றும் ஆளுமை குறித்து அவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது. ஆனால், மேடையில் ஏறும்முன் தன்னைத் தானே மிகவும் நம்பிக்கையான நபராக நம்பவைக்கும் “fake it till you make it” என்ற மனப்பான்மையுடன் தன்னை மாற்றிக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2021-ல் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றதைப் பார்த்ததே தனக்கு அழகுப் போட்டிகளில் ஆர்வம் வரக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ம் ஆண்டு அழகுப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய கஸியா, 2025ல் மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு முதல் ரன்னர்-அப் ஆக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து நடப்பாண்டில் சமீபத்தில் ‘மிஸ் யுனிவர்ஸ் கேரளா 2026’ பட்டத்தை வென்று தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்தார்.
தற்போதைய மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் 52 போட்டியாளர்கள் (31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், 20 வைல்ட்கார்டுகள், 1 NRI) கலந்துகொண்ட இந்த தேசிய அளவிலான போட்டியில் வென்றதன் மூலம், வரும் நவம்பர் மாதம் புவேர்ட்டோ ரிக்கோவில் (Puerto Rico) நடைபெறவுள்ள 75-வது சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் இவர் பங்கேற்கவுள்ளார்.
இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் ஆகவும், மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா 2026 ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் குஜராத்தை சேர்ந்த அனுஸ்ரீ 3ம் இடத்தையும் பிடித்தார். ஒரு வருடம் என்ற குறுகிய காலத்திற்குள் சர்வதேச மேடையை எட்டியுள்ள கஸியாவின் வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



