வானிலை, சந்தை நிலவரம், அரசின் திட்டங்கள் போன்ற விவசாயம் தொடர்பான விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1800-180-1551 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கிசான் கால் சென்டர் எனப்படும் விவசாயிகளுக்கான அழைப்பு மையம் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்படுவதாக கூறினார். பயிர் பாதுகாப்பு, நீர் நிர்வாகம், உரப் பயன்பாடு, பயிர் வகைகள், விதைப்புக் காலம் போன்றவை குறித்த தகவல்களை விவசாயிகள் இந்தக் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். கிராமப்பகுதிகளில் இருந்தும், குக்கிராமங்களிலிருந்தும் தொடர்புகொள்ளலாம் என்றும் விவசாயிகளின் கேள்விகளுக்கு அந்தந்த மாநில மொழியில் பதிலளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள வேளாண் தொலைநிலை ஆலோசகர்கள் வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட அண்மைத் தகவல்கள் பற்றி தெரிவிப்பார்கள். வீடியோக்கள் பகிர்வு, காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல், புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் நவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த அழைப்பு மையங்களில் கிடைப்பதால் வேளாண் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.