கோல்ட்ரிஃப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் இருமல் மருந்துகளை உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த ‘கோல்ட்ரிஃப்’ என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.
கடந்த வாரம் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு அதில் 48.6% ‘டை எத்திலீன் கிளைக்கால்’ என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது தெரிய வந்தது. இதனால், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
அந்நிறுவனத்தின் உரிமத்தையும் தமிழக சுகாதாரத்துறை ரத்து செய்து உத்தரவிட்டது. ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகளில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃபிரெஷ் டிஆர், ரீ லைஃப் ஆகிய இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்துகள் ஏதேனும் மற்ற நாடுகளில் கண்டறியப்பட்டால் உலக சுகாதார அமைப்புக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மருந்துகளை விநியோகிக்கவோ, 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கவோ கூடாது என்றும் என்றும் உலக சுகாதார அமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



