மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், “சென் பார்மா” மருந்து நிறுவனத்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்; மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் உள்ளிட்ட 5 மருந்துகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. மற்ற 4 மருந்துகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இல்லை. ஆனால், கோல்ட்ரிப் மருந்தில், டை எத்திலீன் கிளைசால் ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது.
அதனால், மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், அம்மருந்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்துக்கு பிறகு அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.