மதுபான பாட்டில்களுக்கு தலா ரூ.20 வரை கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மது பாட்டில்களை பயன்படுத்திய பிறகு அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வது மற்றும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இதனை சரிசெய்யும் வகையில், மதுபான பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை என்ற பெயரில் கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா கடந்த 7-ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சட்ட மசோதா சட்டசபையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருவாயை மதுபான பாட்டில்களை முறையாக மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல் மற்றும் மறுபயன்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மீட்புத் திட்டங்கள், மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுபான பாட்டில்களை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இப்போது சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகே சட்டம் அமலுக்கு வரும். அதன்பிறகு மதுபானங்களுக்கு கூடுதல் வரி அமல்படுத்தப்பட்டால், அதன் தாக்கத்துக்கு ஏற்ப மது பாட்டில்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.
Read More : “வேண்டாம் வேண்டாம்னு சொன்னமே”..!! டிரைவர் ரூபத்தில் வந்த எமன்..!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணம்..!!


