லண்டன் மாப்பிள்ளை என நம்பி திருமணத்திற்கு சம்மதித்த இளம் பெண்ணின் வாழ்க்கையில், சில நாட்களில் ஏற்பட்ட மாற்றம் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. மாப்பிள்ளை குறித்த உண்மை தெரியவந்ததைத் தொடர்ந்து பெற்றோர் திருமணத்தை நிறுத்த முயன்ற நிலையில், 24 வயதான ஸ்ரீலேகா தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் வடக்கு வீதியைச் சேர்ந்த குமார், அப்பகுதியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஸ்ரீலேகா பி.எஸ்.சி. பட்டதாரி. இவருக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
லண்டனில் வேலை பார்த்து வருவதாக அந்த இளைஞர் அறிமுகப்படுத்தப்பட்டதால், திருமண பேச்சு இரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலேகாவும் அவருடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் திருமணம் தொடர்பான எதிர்பார்ப்பு அவரிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அந்த இளைஞரின் வேலை தொடர்பான தகவலில் உண்மை வேறாக இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர் லண்டனில் பணியாற்றவில்லை என்றும், மயிலாடுதுறையில் உள்ள கோழிக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அந்த இளைஞருடன் மகளின் திருமணத்தை நடத்த பெற்றோர் மறுத்துள்ளனர். வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், ஸ்ரீலேகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே அந்த இளைஞரை திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டதாக கூறி, பெற்றோருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருமண விவகாரம் தொடர்பான இந்தப் பிரச்சினை சம்பவத்தன்று காலையிலும் வீட்டில் நீடித்துள்ளது. அதன் பின்னர் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீலேகா, கீழ்தளத்தில் உள்ள தந்தையின் கடைக்குச் சென்றுள்ளார்.
அங்கு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் குமார் உடனடியாக மகளை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயங்களுடன் இருந்த ஸ்ரீலேகாவை மீட்க முடியவில்லை. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஏற்பாட்டில் தொடங்கிய பிரச்சினை, மாப்பிள்ளை குறித்த தகவல் தொடர்பான சர்ச்சையாக மாறி, இறுதியில் இளம் பெண்ணின் உயிரிழப்பில் முடிந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: தங்க நகையை அடகு வைப்பதா? விற்பதா?.. எதில் அதிக லாபம்?



