கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள கும்ளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாராயணசாமி (39). இவரது மனைவி வித்யா (30). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கார்பெண்டர் வேலை செய்யும் புனித் என்பவருக்கும் கடந்த ஓராண்டாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனை அறிந்த கணவர் நாராயணசாமி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், வித்யா கள்ளக்காதலை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால், கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஊரில் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு வித்யா வீட்டை விட்டு சென்றுள்ளார். அவர், தனது பெயரில் இருந்த 8 சென்ட் நிலத்தில் 1500 சதுர அடி நிலத்தை அதே ஊரை சேர்ந்த அம்ரீஷ் என்பவரிடம் ரூ.22 லட்சத்திற்கு விற்று விட்டு பணத்தை பெற்று கொண்டு கள்ளக்காதலன் புனித்துடன் கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதிக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே, வித்யா கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள வங்கியில் தனது சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வந்துள்ளார். அதனை அறிந்த கணவர் நாராயணசாமி வித்யாவிடம் சென்று நிலம் விற்ற பணம் மற்றும் சொத்தை குழந்தைகள் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, கீழே கிடந்த கல்லை எடுத்து நாராயணசாமி வித்யாவை பலமாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார்
தகவல் அறிந்து சென்ற தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நாராயணசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



