மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் சார்ந்த இந்து முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்த மாநாடு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பாஜக தலைவர்கள் பங்கேற்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் முற்றிலும் பக்திப்பூர்வமானது என்று பாஜக நிர்வாகிகள் கூறியிருந்தாலும், முக்கிய அரசியல் பிரமுகர்களின் வருகை அதன் அரசியல் முக்கியத்துவத்திற்கு வலு சேர்த்தது.
நயினார் நாகேந்திரன் இந்த மாநாட்டில் சிறப்பு ஆடியோ பக்தி ஆல்பத்தை வெளியிட்டார். முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து மத விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார். அண்ணாமலை பேசுகையில், அரசியல்வாதிகள் இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லை என்று கூறி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வட தமிழ்நாட்டில், பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் ருத்ராட்சம் அணிந்து செல்வது கூட கேள்விக்குறியாகியுள்ளது. நம்முடைய வாழ்வியல் முறைகள் பாதிக்கப்படும்போது, நாமும் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார். அதேபோல் இந்த மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியும் தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றது. நாஸ்திக கருத்து அதிகம் பேசப்பட்ட தமிழ்நாட்டில், ஆன்மிகத்தின் எழுச்சியை உணர்த்தும் விதமாக இந்த வீடியோ அமைந்து இருந்தது.
பொது உணர்வு மற்றும் அணி திரட்டல்: பழனி, திருச்செந்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருந்தனர். கிராமங்களில் இருந்து கூட ஏராளமான மக்கள் “முருகா முருகா” என்று கோஷமிட்டபடி வந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சை கருத்துக்கள் திமுக தரப்பிலிருந்து வந்தபோது கூட பெருந்திரளாக கூடி போராடியவர்களில் பல பக்தர்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். அந்த திடீர் ஒன்றிணைந்த கூட்டத்தை அரசே எதிர்பார்க்கவில்லை.
இந்த மாநாடு ஆன்மீக பெருமையையும் பக்தியையும் தமிழ்நாட்டில் தூண்டி உள்ளது. தமிழகத்தின் நிலம் சனாதன தர்மத்தில் ஊறி திளைத்தது என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த மாநாடு அமைந்தது. பெருந்திரளாக 5 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதே இதற்கு மிகப்பெரிய உதாரணம்.
எதிர்கட்சிகள் கண்டனம்: இருப்பினும், திமுக, சிபிஎம், மற்றும் மதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்வை கடுமையாக விமர்சித்தன. வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக பாஜக இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் அரசியலை மதத்துடன் கலக்க முயற்சிப்பதாக அவை குற்றம் சாட்டின.
பாஜக இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்த கூட்டம் அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படவில்லை என்று திட்டவட்டமாக கூறியது. அனைத்து காவல்துறை மற்றும் நீதிமன்ற விதிகளையும் பின்பற்றியதாகவும், பக்தர்கள் மத காரணங்களுக்காக மட்டுமே வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதிமுகவின் ஆர்.பி. உதயகுமார் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அழைக்கப்பட்டதால் வந்ததாகவும், எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
2026 தேர்தல் நோக்கம்: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முருக பக்தர்கள் மாநாடு பொதுமக்களிடையே ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிலர் இது மக்களிடையே பெருகி வரும் பக்தியின் அடையாளமாக பார்க்கிறார்கள், இன்னும் சிலர் 2026 தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் மதம் ஒரு முக்கிய பங்கெடுக்கப்போகிறது என்று கருதுகின்றனர். ஆன்மீகக் கூட்டமாகத் தொடங்கிய கூட்டம், இப்போது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது.
Read more: ‘உத்தரபிரதேச டைகர்’ என அழைக்கப்படும் மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார்..!!