ஆகஸ்ட் 15 என்றாலே குழந்தைகளுக்கு கொடியேற்றம், தேசிய கீதம், பள்ளி விழாக்கள், இனிப்புகள் என கொண்டாட்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பதை குழந்தைகள் தெரிந்துகொள்வதும் முக்கியம். பெற்றோர்கள் இதை வரலாற்றுப் பாடம் போல இல்லாமல், அவர்களுக்கு புரியும் வகையில் ஒரு சின்னக் கதையாகச் சொல்லிக் கொடுத்தால், நாட்டின் வரலாற்றை ஆர்வமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
“குட்டீஸ்… நாம இப்போ நம்ம நாட்டுல சுதந்திரமா இருக்கோம் இல்லையா? ஆனா, எப்போதுமே இப்படித்தான் இருந்ததா தெரியுமா? ஒரு காலத்துல இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில இருந்துச்சு. நம்ம நாட்டை நாமே ஆளணும், நம்ம மக்கள் சுதந்திரமா வாழணும்னு பல பேர் போராட ஆரம்பிச்சாங்க. காந்தி அமைதியான வழியில போராட மக்களை ஒன்றிணைத்தார். அதேபோல பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் மாதிரி பலரும் தங்களுக்குத் தெரிஞ்ச வழியில நாட்டுக்காக போராடினாங்க. பெரிய தலைவர்கள் மட்டும் இல்லாம, நிறைய சாதாரண மக்களும் இந்தப் போராட்டத்துல கலந்துகிட்டாங்க.
பல வருஷங்கள் நடந்த இந்தப் போராட்டத்துக்குப் பிறகு, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நம்ம இந்தியா சுதந்திரம் பெற்றுச்சு. அதனாலதான் ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடுறோம். நாம இன்னைக்கு சுதந்திரமா இருக்குறதுக்குப் பின்னாடி நிறைய பேரோட போராட்டமும் தியாகமும் இருக்கு. இதுதான் நம்ம குழந்தைகளுக்கும் தெரியணும்!” என்று பெற்றோர்கள் எளிமையாக எடுத்துச் சொல்லலாம்.
குழந்தைகளுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் மற்றும் தேதிகளை மட்டும் மனப்பாடம் செய்ய வைப்பதைவிட, “அவர்கள் ஏன் போராடினார்கள், என்ன செய்தார்கள், அதன் மூலம் நமக்கு என்ன கிடைத்தது?” என்பதைப் புரிய வைப்பது முக்கியம். இதன் மூலம் சுதந்திர தினம் அவர்களுக்கு வெறும் கொண்டாட்ட நாளாக இல்லாமல், நமது நாட்டின் வரலாற்றையும் சுதந்திரத்தின் மதிப்பையும் அறிந்துகொள்ளும் நாளாக மாறும்.



