ஈரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஈரானின் அரசு சார்ந்த ‘நூர்நியூஸ்’ (Nournews) செய்தி வெளியிட்டுள்ளது.
வளைகுடா பகுதியில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதை உறுதிப்படுத்திய ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர், வெடிப்பு நடைபெற்ற பகுதியிலிருந்து புகை மூட்டங்கள் எதுவும் உடனடியாக வெளியேறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறிய அளவிலான ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பலில் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், வளைகுடா பகுதியில் நிகழ்ந்த இந்த வெடிப்புச் சம்பவங்கள் குறித்தோ அல்லது ஈரானிய டேங்கர் கப்பல் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தோ ஈரான் மற்றும் அமெரிக்க அரசுகள் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதிக்குக் காரணமான கார்க் தீவு அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



