மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில், டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உடனடி நடவடிக்கையால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
ரயிலின் காவலர் ஒருவர் பெட்டியில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதை முதலில் கவனித்து உடனடியாக லோகோ பைலட்டுக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பின்னர் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவசர வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
ரயில்வே அதிகாரிகளின் தகவலின்படி, தீ விபத்து ஏற்பட்ட பி-1 பெட்டியில் சுமார் 68 பயணிகள் இருந்தனர். அனைவரும் சுமார் 15 நிமிடங்களுக்குள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எந்தவித உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படவில்லை. இந்த ரயில் 12431 என்ற எண்ணுடன் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 5.15 மணியளவில் விக்ரம்கர் அலோட் மற்றும் லூனிரிச்சா நிலையங்களுக்கு இடையே இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து பி-1 பெட்டியிலிருந்து தொடங்கி, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த காவலர் பெட்டி (எஸ்.எல்.ஆர்) பகுதியிலும் பரவியது. உடனடியாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாதிக்கப்பட்ட பெட்டிகள் ரயிலிலிருந்து பிரிக்கப்பட்டன. பின்னர் காலை 9.45 மணியளவில் ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து, தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் ரயில்களின் தீ பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தணிக்கை செய்யவும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ரத்லாம் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்ததாவது, சம்பவத்தால் டெல்லி–மும்பை வழித்தடத்தில் பல ரயில்களின் இயக்கம் தாமதமடைந்தது. குறைந்தது 5 முதல் 8 ரயில்கள் பாதிக்கப்பட்டன.
கடந்த இரண்டு வாரங்களில் இது போன்ற இரண்டாவது தீ விபத்து சம்பவம் என்பதால் ரயில்வே பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழுந்துள்ளது. முன்னதாக ஹைதராபாத்–ஜெய்ப்பூர் ரயிலிலும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெட்டி மற்றும் உபகரணங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



