இளையராஜா என்ற பெயருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.. இசை ஞானி, இசைக்கடவுள், மேஸ்ட்ரோ, ராகதேவன் என பல பெயர்களால் அழைக்கப்படும் இளையராஜா தன் இசையின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்..
1976-ம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்க்ளுக்கு இசையமைத்துள்ளார்.. மேலும் 7000 பாடல்களை எழுதி உள்ளார்.. திரையுலகில் தனது இசையின் 50 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவர் 8600-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்..
இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்..
தமிழ் திரையுலகில் அழியாத முத்திரை பதித்துள்ள இளையராஜாவுக்கு சமூக வலைதளங்களிலும் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் முதல்வர் விஜய் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்..



