ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை மொத்தம் 77 டெஸ்ட் போட்டிகளில் 27.52 சராசரியில் 306 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். அதன்பின் 2018 ஐபிஎல் ஏலத்தின்போது ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடிக்கு வாங்கியது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த முறை ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. அதன்பின் நடைபெற்ற எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்கவில்லை. தொடர்ந்து ஐபிஎல்லை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஐபிஎல்-லில் ஏன் விளையாடுவதில்லை என்பது குறித்து மிட்செல் ஸ்டார்க் பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், ” ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவதற்காக, சில விஷயங்களை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஐபிஎல் தொடரில் பணம் நிறைய கிடைக்கிறதுதான். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட விரும்புகிறேன்.
10 வருடங்களுக்கும் மேலாக மூன்று பார்மட் கிரிக்கெட்டிலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது கடினமான ஒன்றுதான். ஆனால் நான் இவ்வளவு தூரம் வந்ததற்காக அணிக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்க விருப்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.