“பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.. என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்..” விஜய் உருக்கம்..!

vijay tvk 2

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும்  எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..


இந்த சூழலில் மே 7-ம் தேதி அதாவது நாளை மறு நாள், தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கவர்னருக்கு தவெக கடிதம் எழுதி உள்ளது..

இந்த நிலையில் தவெக தலைவர் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம்.

எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் – வருகின்றனர்.

அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று.

தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

You May Like