தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்சார தளவாடப் பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியம் மற்றும் துணை நிறுவனங்கள் இடையிலான உயர்நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர்; பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து வட்டங்களிலும் தேவையான தளவாடப் பொருட்களை மழைக்கு முன்பாக இருப்பு வைக்க வேண்டும்.
மேலும் தாழ்வான மின்பெட்டிகளை உயர்த்துவது, வெளியே தெரியும் புதைவட கம்பிகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். சீரான மின் உற்பத்தியை உறுதிசெய்ய போதிய அளவில் நிலக்கரி கையிருப்பில் வைக்க வேண்டும். நுகர்வோருக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
காற்று, மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்லக் கூடாது. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் மின் வாரிய அலுவலகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின்போது வெட்டவெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அடியிலோ நிற்கக் கூடாது. இடி, மின்னலின் போது டிவி, மிக்ஸி, கணினி, கைபேசி, தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது.