மாதந்தோறும் நிலையான வருமானம் தேடும் மக்களுக்கு தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இந்தத் திட்டத்தில் ஒருமுறை மட்டும் பணத்தை முதலீடு செய்தால், அடுத்த 5 ஆண்டுகள் வரை ஒவ்வொரு மாதமும் நிரந்தர வட்டித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள், சேமித்து வைத்திருக்கும் மொத்தத் தொகைக்கு பாதுகாப்பான முதலீட்டை தேடுபவர்கள் மற்றும் ஆபத்து இல்லாத மாதாந்திர வருமானத்தை விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தபால் அலுவலகத் திட்டம் என்பதால் முதலீடு செய்யப்படும் அசல் தொகைக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், வட்டித் தொகைக்கும் அரசு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. கணக்கு தொடங்கிய நாளிலிருந்து இந்த வட்டி விகிதம் அடுத்த 5 ஆண்டுகள் வரை மாறாமல் இருக்கும். சந்தை வட்டி விகிதங்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டாலும், முதலீட்டாளர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் தனிநபர் கணக்காக அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதேசமயம், கணவன்-மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் கூட்டுக் கணக்கு தொடங்கினால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கணவன்-மனைவி இணைந்து ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி அடிப்படையில் ரூ.1,11,000 வரை வட்டி கிடைக்கும். இதனை மாதாந்திரமாக கணக்கிட்டால் சுமார் ரூ.9,250 வரையில் மாதந்தோறும் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் காலஅளவு 5 ஆண்டுகள் ஆகும். இந்த காலத்தில் மாதந்தோறும் வட்டித் தொகையை பெற முடியும். 5 ஆண்டுகள் நிறைவடைந்ததும் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை முழுமையாக திருப்பி வழங்கப்படும். மேலும், முதலீட்டாளர்கள் விரும்பினால் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் புதுப்பித்து முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.
அதேசமயம், அவசர தேவைக்காக திட்ட காலத்திற்கு முன்பாக பணத்தை எடுத்துக்கொள்ள சில விதிமுறைகளும் உள்ளன. 1 ஆண்டுக்கு முன்பு பணத்தை எடுக்க அனுமதி கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் பணத்தை திரும்பப் பெற்றால் அசல் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்படும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்தால் 1 சதவீதம் அபராதமாக பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



