“ஆயிரம் உறவுகள் நம்மைத் தேடி வந்தாலும், தாயின் அன்புக்கு ஈடாக யாரும் இருக்க முடியாது” என்ற வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. தாயின் இடத்தில் யார் வந்தாலும், ஒரு தாய் போல அன்பும் அரவணைப்பும் காட்டுவது அனைவராலும் சாத்தியமில்லை. குறிப்பாக, தாய் ஸ்தானத்தில் இருக்கும் சில சித்திகள் செய்யும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த வகையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம், சீனிவாசராவ் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு குமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 11 மற்றும் 7 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குமுதா தனியாக பிரிந்து சென்று விட்டார்.
மணிகண்டன் தனது முதல் மனைவி பிரிந்து சென்றப்பின், 25 வயதான கயல்விழி என்ற பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கயல்விழி, முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது சிறுமியை சூடு வைத்து, சுடுநீர் ஊற்றி, அடித்து பல சித்ரவதைகள் செய்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல், எப்போதும் நீ சென்று தண்டவாளத்தில் விழுந்து செத்துவிடு என கூறி வந்துள்ளார். இவர்களின் வீட்டில் இருந்து அடிக்கடி சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து குழந்தைகள் நலத்துறையின் 1098 க்கு தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, குழந்தை பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கயல்விழியை கைது செய்துள்ளனர்.
Also Read: “நீ அவன் கூட உல்லாசமா இருக்கணும்” பணத்திற்காக சித்தி செய்த காரியம்..



