முன்பெல்லாம் மிளகாய் பொடி என்பது பெண்கள் சமையல் கட்டில் பயன்படுத்தும் ஒரு பொருளாக மட்டுமே இருந்து வந்தது. அந்த மிளகாய் பொடி பின்பு வேறு பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் இந்த மிளகாய் பொடியை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றது கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி திரைப்படம் தான்.
அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இருக்கும் திரிஷா கதாநாயகன் விக்ரம் காவல்துறை அதிகாரி என்று தெரியாமல் அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டி விக்ரமுடன் வரும் மற்றொருவர் மீது மிளகாய் பொடியை தூவி காவல்துறையிடமே பிடித்துக் கொடுக்கும் சம்பவத்திற்கு பிறகு மிளகாய் பொடி வேறு ஒரு பரிமாணத்திற்கு தயாரானது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் இந்த மிளகாய் பொடியை வைத்து தற்போது பல குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தம்பதியினரின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி தந்தையும், மகனும் சேர்ந்து கொடூரமாக வெட்டி கொன்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
தற்போது அதே போன்று ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்துள்ள மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய கண்களில் மிளகாய் பொடி தூவி அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த பிறகும் ஆத்திரம் அடங்காத அந்த மர்ம கும்பல், அந்த இளைஞரின் தலையை வெட்டி துண்டித்து தனியாக எடுத்துச் சென்றது.
இந்த நிலையில் தான் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தலை இல்லாத நிலையில் ஒரு இளைஞரின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த தலை இல்லாத உடலின் அருகே ஒரு இருசக்கர வாகனமும் கிடந்திருக்கிறது. உடனடியாக இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலினடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞரின் தலையற்ற உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் துண்டிக்கப்பட்ட தலையை தேடி வருகிறார்கள். இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது மிளகாய் பொடியை தூவி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சித்தூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.