நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக் கூறி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், “இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 2025 நீட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் கடந்த மே 4 ஆம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. சென்னை அருகே ஆவடியில் உள்ள ஶ்ரீகேந்திரிய வித்யாலயா சி.ஆர்.பி.எப் மையத்தில் 464 மாணவர்கள் மதியம் 2 மணியில் இருந்து 5 மணி வரை நீட் தேர்வு எழுதினர். 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
தேர்வு மையத்தில் தற்காலிக மின் சேவைக்காக எந்தவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளவில்லை. எனவே குறைவான வெளிச்சத்தில் கடுமையான சிரமத்துக்கு இடையே தேர்வை எழுதினோம். தேர்வில் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட எங்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்,”என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்த போது 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறு தேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும் எனவும், மாணவர்களின் வழக்கு தகுதியானதாக இல்லை என்றும் கூறி வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. தொடர்ந்து நீட் மறு தேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் மேல் முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக் கூறி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மறு தேர்வுக்கு உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 16 மாணவர்களுக்காக 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
Read more: ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் மீண்டும் கோளாறு.. பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட பயணிகள்..