பலரின் வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். நீடித்த மனஅழுத்தம், குடும்பத்தில் தொடரும் கருத்து வேறுபாடுகள், பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு, தனிமை உணர்வு, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணிகள் சிலரின் மனநிலையை கடுமையாக பாதிக்கக்கூடும். இத்தகைய சூழலில், உரிய ஆதரவும் ஆலோசனையும் கிடைக்காமல் போகும்போது சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றும் அபாயம் அதிகரிக்கிறது.
பல நேரங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கடுமையான கடன் சுமை, குடும்பப் பிரச்சனை, வேலையின்மை மற்றும் தனிமை போன்ற காரணங்களால் தற்கொலை எண்ணங்கள் உருவாகின்றன. ஆனால் இது ஒருபோதும் எதற்கும் இறுதி முடிவாகாது. அந்த வகையில் தற்போது ஆந்திரா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கூடூர் மண்டலம் அனந்தாயிபேட்டையை சேர்ந்தவர் 60 வயதான ரஜினி என்ற மூதாட்டி. இவருக்கு 40 வயதான கவுரி என்ற மகளும், 35 வயதான மதுபாலா என்ற மருமகளும் உள்ளனர். இந்நிலையில், ரஜினி தனது மகள் மற்றும் மருமகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராமல் இருந்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து கூடூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டி இருந்த கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் வசித்து வந்த 3 பேரும் பினாமாக தூக்கில் தொங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கூடூர் போலீசார், அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மசூலிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவர்களின் மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களது மரணத்துக்கு குடும்பத்தகராறு தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவர்களின் உயிரிழப்பு தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



