நேபாள அரசு சமூக ஊடக தளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் இயங்கும் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாததால், பல தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் தெரிவித்ததாவது, நேபாளத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சுமார் இரண்டு டஜன் சமூக ஊடக தளங்களுக்கு பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டும், அவர்கள் அதிகாரப்பூர்வ பதிவு செய்ய முன்வராததால், உடனடியாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.
இதன் பேரில், Facebook, YouTube, X (Twitter) உள்ளிட்ட பல பிரபல தளங்களுக்கு நேபாளத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், TikTok, Viber மற்றும் மேலும் மூன்று சமூக வலைதளங்கள் அரசாங்கத்தில் சரியாக பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
நேபாள அரசு, சமூக ஊடக நிறுவனங்கள் நாட்டில் தொடர்பு அலுவலகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்றும், தளங்கள் பொறுப்புடன் இயங்குவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், அந்த மசோதா கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் முயற்சி என்றும், ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்களை அடக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்றும் உரிமைக் குழுக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த முடிவு காரணமாக நேபாளத்தில் சமூக ஊடக பயனர்களிடையே பெரும் அதிருப்தியும் பரபரப்பும் நிலவுகிறது.



