மாணவர்களுக்கு சைக்கிள் மட்டும் வழங்காமல், அவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கூடுதல் உபகரணங்களுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள்களில் நிறம் முதல் உபகரணங்கள் வரை சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாணவிகளுக்கான சைக்கிள்கள் இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்திலும், மாணவர்களுக்கான சைக்கிள்கள் ராணுவ பச்சை நிறத்திலும் தயாரிக்கப்பட உள்ளன. சைக்கிளுடன் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படுவதால், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரும்போது பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயன்படுத்த முடியும்.
சைக்கிள்கள் மாணவர்களின் வயது மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட உள்ளன. தரத்தில் எந்தவித குறைபாடும் ஏற்படாத வகையில் விநியோகத்திற்கு முன்பே சைக்கிள்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட உள்ளன.
இதற்காக சைக்கிள்களின் தரத்தை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தயாரிக்கப்பட்ட சைக்கிள்களில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளனவா, விதிமுறைகளுக்கு ஏற்ப அவை தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
இந்த சைக்கிள்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. தற்போது டெண்டர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சைக்கிள்களின் நிறம் உள்ளிட்ட சில அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப சைக்கிள்களை தயாரிக்கும் பணிகள் அடுத்தகட்டமாக நடைபெற உள்ளன. அதன் பின்னர் மாணவர்களுக்கு புதிய வடிவமைப்பு மற்றும் கூடுதல் உபகரணங்களுடன் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
Also Read: தமிழகத்தில் ஆண்களின் இறப்பு அதிகரிப்பு.. வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரம்!



