அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் ஈரான் இனி மத்திய கிழக்கில் மற்ற நாடுகளை மிரட்டும் “அதிகாரம் கொண்ட நாடாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இந்த போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் சென்றுள்ள நிலையில், சனிக்கிழமையும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தற்போது மத்திய கிழக்கு நாடுகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், இனிமேல் அண்டை நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்திய கடுமையான தாக்குதல்களின் காரணமாகவே ஈரான் இந்த உறுதியை அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஈரான் முன்பு மத்திய கிழக்கு முழுவதையும் கட்டுப்படுத்தி ஆட்சி செய்ய விரும்பியது என்றும், ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதல் முறையாக அந்தப் பகுதியிலுள்ள மற்ற நாடுகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் டிரம்ப் கூறினார்.
தனது பதிவில் அவர் கூறியதாவது: “அவர்கள் ‘நன்றி டிரம்ப் அதிபரே’ என்று கூறியுள்ளனர். அதற்கு நான் ‘வரவேற்கிறேன்’ என்று பதிலளித்தேன். ஈரான் இனி மத்திய கிழக்கின் அதிகாரம் காட்டும் நாடு அல்ல. அதற்கு பதிலாக அது தற்போது ‘மத்திய கிழக்கின் தோல்வியடைந்த நாடு’ ஆகிவிட்டது. அவர்கள் முழுமையாக சரணடையும்வரை அல்லது முற்றிலும் சிதைந்து வீழும்வரை, இன்னும் பல ஆண்டுகள் அவர்கள் அந்த நிலையிலேயே இருப்பார்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டிரம்ப் “ஈரானின் மோசமான செயல்களின் காரணமாக, இதுவரை தாக்குதல் நடத்துவது குறித்து கூட யோசிக்கப்படாத பகுதிகளும் சில குழுக்களும் இப்போது முழுமையாக அழிக்கப்படுவதற்கும் கடுமையான தாக்குதலுக்கும் பரிசீலனையில் உள்ளன. இதை கவனமாக எடுத்துக் கொண்டதற்கு நன்றி,” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



