தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர், கடல் அரிப்பு, கடல் நீர் உட்புகுதல் மற்றும் வெள்ள அபாயம் உள்ள கடலோரப் பகுதிகளை முன்கூட்டியே துல்லியமாகக் கண்டறிந்து, அங்குள்ள பொதுமக்களின் தரவுகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களை நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தும் வகையில் தூய்மைப்படுத்தி, அங்கு தடையில்லா குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். மேலும், மீனவர்களுக்கு உடனுக்குடன் வானிலை எச்சரிக்கைகளைச் சேர்க்கவும், படகுகள், மிதவைகள், ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், மழைக் காலங்களில் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் எக்காரணத்தைக் கொண்டும் நனைந்து வீணாகாத வகையில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கண்டிப்புடன் தெரிவித்தார். சாலைகள், பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களின் அடைப்புகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்றும், அவசரத் தகவல் தொடர்புக்கு சாட்டிலைட் போன்களைப் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இக்கூட்டத்தின் போது, எல்-நினோ பருவநிலை மாற்ற பேரிடர் மேலாண்மைக்கான முதற்கட்ட ஆய்வறிக்கையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வரிடம் சமர்ப்பித்தார்.
இதேபோல், மாநிலம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். வீடு தோறும் சென்று கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அரசு தலைமை மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை போதுமான மருந்துகள், ரத்தப் பரிசோதனை வசதிகள் மற்றும் உரிய சிகிச்சை படுக்கைகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறையுடன் உள்ளாட்சி அமைப்புகள் கைகோர்த்து தூய்மைப் பணிகளை முழுவீச்சில் முன்னெடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.



