சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 18 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வெற்றிகரமாக வழிநடத்தி வந்த நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங், சமீபத்தில் தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடைபெற்றார். அவரது வழிகாட்டுதலில் சிஎஸ்கே அணி 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று அசைக்க முடியாத பலம் வாய்ந்த அணியாகத் திகழ்ந்தது. இந்நிலையில், பிளெமிங்கின் விலகலுக்குப் பின் அணியை வழிநடத்தப் போகும் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள ‘மஞ்சள் படை’ ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்திய அணியின் 2011 உலகக் கோப்பை நாயகனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான ஜாகீர் கானை சிஎஸ்கே நிர்வாகம் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கிரிக்கெட் இயக்குநராகவும், மென்டராகவும் செயல்பட்டு அளப்பரிய அனுபவம் வாய்ந்த ஜாகீர் கான், சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளராகக் களமிறங்குவது அணிக்குக் கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது. மேலும், சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும் என்று தோனி கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சிஎஸ்கேவின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கிறார். ஜாகீர் கானை சென்னை சூப்பர் கிங்ஸ் குடும்பத்தின் தலைமைப் பயிற்சியாளராக மனதார வரவேற்கிறோம்” என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளது. பிளெமிங்கின் சகாப்தத்திற்குப் பிறகு, ஜாகீர் கானின் வழிகாட்டுதலில் சிஎஸ்கே அணி புதிய உத்வேகத்துடன் களம் காணவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Read More : வடகிழக்கு பருவமழை..!! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை..!! மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு..!!



