வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்காக தலைமை ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுகின்றது. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே, குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 – 50% மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது.
இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்காக தலைமை ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேங்கும் பகுதிகள், திறந்த சாக்கடைக் கிணறுகள், கழிவுநீர் குழாய்கள் மற்றும் நீர்தேங்கும் சாக்கடை மூடப்பட்டு இருப்பதை உறுதிசெய்து, மாணவர்கள் அப்பகுதிகளில் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும்.
மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதேபோல, பள்ளியின் சுற்றுச்சுவர் உறுதித்தன்மை, மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என்று கண்காணித்து சரிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் மற்றும் அமைப்புகள் உறுதியாக உள்ளனவா என்பதைப் பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட அல்லது பயன்படாத மின்சாதனப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், மின் இணைப்புகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.