சூதுவாது அறியா சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என்பதை தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்..
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 56% அதிகரித்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. பெண் கல்வியையும், பெண் சுதந்திரத்தையும் போற்றி வளர்த்த தமிழகம், இன்று சூதுவாது அறியா சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என்பதை தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளாக பாலியல் குற்றங்களும், பதின்ம வயது கருத்தரித்தலும், குழந்தைத் திருமணங்களும் கட்டுப்பாடின்றி பெருகி வருகிறதே, “ஸ்டாலின் ஆட்சியில் மகளிர் முன்னேற்றம்” என்பதன் அர்த்தம் இதுதானா..? அதுசரி சாதியக் கட்டுப்பாடு, பெண்கள் பாதுகாப்பு, பகுத்தறிவு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் திமுக ஆட்சியில் நிலைகுலைந்து கிடக்கையில், குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதை பற்றி மட்டும் இந்த அரசுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது?
திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்யும் திமுக உடன்பிறப்புகள் இருக்கையில் சமூகநீதி எப்படி சாத்தியமாகும்? இப்படி தங்களின் சீர்கெட்ட ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்கத் தான் இந்தி எதிர்ப்பு, தொகுதி மறுவரையறை, மாநில உரிமை என வாரத்திற்கு ஒரு புதிய புரளியைக் கிளப்பி மக்களை மடை மாற்றிக் கொண்டிருக்கிறாரா தமிழக முதல்வர் ஸ்டாலின் என கேள்வி எழுப்பி உள்ளார்.
Read More: பரபரப்பு…! செந்தில் பாலாஜியின் சகோதரர் உட்பட 12 பேருக்கு 50,000 பக்கத்தில் குற்றப்பத்திரிகை…!