மருத்துவப் பணியாளர்கள் என்றால் நம்பிக்கையுடன் வீட்டுக்குள் அனுமதிக்கும் மக்களின் மனநிலையைப் பயன்படுத்தி, நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டதாக இளம்பெண் உள்ளிட்ட இருவர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். செவிலியர்கள் போல வேடமிட்டு வந்த அவர்கள், தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி நகையைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரில் பயணம், வெள்ளை நிறக் கோட், மருத்துவப் பரிசோதனை என்ற அறிமுகம் எனத் திட்டமிட்டு செயல்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில், ஈரோடு மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜன் (26), தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த நிசாலினி (24) ஆகியோர் உள்ளனர்.
கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லியில் தனியாக வசிக்கும் வள்ளியம்மாள் (60) என்பவரின் வீட்டுக்கு கடந்த 15-ம் தேதி மாலை இருவரும் சென்றுள்ளனர். அரசின் இலவச மருத்துவத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்ய வந்திருப்பதாகக் கூறி அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர் கால் வலிக்காக ஊசி செலுத்துவதாகக் கூறி மயக்க ஊசியைப் பயன்படுத்தியுள்ளனர். வள்ளியம்மாள் மயங்கியதும், அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு மயக்கம் தெளிந்த வள்ளியம்மாள், தன்னிடம் இருந்த நகை காணாமல் போனதை அறிந்து போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முயன்றனர்.
இந்த விசாரணைக்கு இடையே, நடுப்பாளையம் அருகே அண்ணாமார் கோயில் பகுதியில் மலையம்பாளையம் போலீஸார் நேற்று காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த சுந்தர் ராஜன் மற்றும் நிசாலினியைப் பிடித்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவப் பணியாளர்கள் எனக் கூறி வீடுகளுக்குள் வருபவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் இதுபோன்ற வேறு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
Also Read: காய்கறி வாங்கச் சென்ற தாய்.. 16-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது குழந்தை..



