அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழுவில் ஓய்வூதியம் குறித்த கருத்துகளை வழங்குவதற்கு வரும் 18.8.2025 முதல் சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஆசிரியர், அரசு அலுவலர்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. .
இது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேநேரம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு ஜன1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2003- 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி மாநில அரசுப் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் மற்றும் நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தயாள் ஆகியோர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேச இக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, ஆக.18, ஆக, 25, செப்.1 மற்றும் செப்.8 ஆகிய 4 நாட்களில் காலை 11 மணிக்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 பிரதிநிதிகள் குறித்த தகவலை தெரிவிக்கும்படி, சங்கங்களின் தலைவர், செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.