அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நாமக்கல்லில் பேசிய அவர்; விசைத்தறி தொழிலாளர்களின் பணத்தாசை காட்டி கிட்னி எடுத்துள்ளனர். திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பள்ளிபாளையத்தில் பெண்ணுக்கு பணத்தாசை காட்டி கிட்னிக்கு பதில் கல்லீரலை எடுத்துவிட்டனர். அதிமுக ஆட்சி அமைந்துவுடன் இந்த கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார். இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை. சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் காவல் துறையினர் பார்த்து பயந்த நிலை மாறிவிட்டது. இதற்கு முடிவு கட்டும் தேர்தல் 2026 சட்டப்பேரவை தேர்தல்.
திமுக ஆட்சி அமைந்த ஓரே ஆண்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. தமிழகம் இந்தியாவில் போதைப்பொருள் அதிகம் உள்ள மாநிலமாக விளங்குகிறது. கரூரில் காவல் துறை பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 உயிர் காப்பற்றப்பட்டிருக்கும். இந்த சம்பவம் நடந்த பிறகு தான் காவல் துறையினர் ஓரளவு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு முழுமையாக பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமையாகும். எதிர்க்கட்சிகளின் போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆளுங்கட்சி திமுக பொதுக்கூட்டம் நடத்த எந்த இடம் கேட்டாலும் காவல் துறையினர் அனுமதி தருகின்றனர். அதிமுக கேட்டால் அனுமதி கொடுப்பதில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெறும் நிலை உள்ளது. திமுகவின் ஆயுட் காலம் 7 மாதம் தான் உள்ளது. அதன்பின் அதிமுக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் காஞ்சிபுரம் அருகில் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அது தமிழக அரசுக்கு தெரியவில்லை. அந்த நிறுவன தயாரிப்பு மருந்தை குடித்த மத்திய பிரேதசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர்.
திமுக ஆட்சியில் குடிக்கும் நீரில் மலம் கலக்கப்படுகிறது. இந்த ஆட்சி வந்தபோது வேங்கைவயல் சம்பவத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியவில்லை. இது கைலாகாத அரசாங்கம். திறமையற்ற பொம்மை முதல்வர் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். வேங்கைவயல் பிரச்சினை தீர்வதற்குள் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் வடுகப்பட்டி என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி திறக்கப்பட்டபோது அங்கு மலம் கலந்த நீர் இருந்துள்ளது. இப்படிப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடக்கிறது. இவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு முதல்வருக்கு திறமையில்லை என்றார்.