அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டு தோல்வியை சந்தித்த பாஜகவும், அதிமுகவும் இப்போது மீண்டும் கைகோர்த்து கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், அதிமுகவில் அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காமல் சிரமப்படும் சில முக்கிய தலைவர்கள், எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் திமுக பக்கம் நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவிலிருந்து நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கத்தில், திமுக ‘ஆபரேஷன் அதிமுக’ என்ற பெயரில் ஒரு ரகசியத் திட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு, திமுகவிற்கு வரச் செய்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, ஓ.பி.எஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாகவே, அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் திமுகவிற்கு சென்றுள்ளனர். அதில்: செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன்,
பழனியப்பன் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் அதிமுகவிற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
தற்போது, அதிமுக நிர்வாகிகளை திமுக பக்கம் இழுக்கும் பொறுப்பு முத்துச்சாமி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும், “முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பும் முன்னரே இந்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று திமுக தலைமைத் தலைமையிலான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.