தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள்.
அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வருகிற 02-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 02.10.2025 காந்தி ஜெயந்தி தினம் அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள்/முன்னாள் படை வீரர் மது விற்பனைக் கூடம் அனைத்தும் 01.10.2025 இரவு 10.00 மணி முதல் 03.10.2025 காலை 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க வேண்டும். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோல தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி அன்று அனைத்து மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .