1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து, நவீன தமிழ்நாட்டின் அடித்தளத்தை அமைத்தவர் அறிஞர் அண்ணா. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், செயல் வீரர், முதலமைச்சர் எனப் பல்வேறு சிறப்புகளை பெற்றிருந்தார். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை தமிழகத்தில் வேரூன்றுவதற்கும் வித்திட்டார். ஆனால், ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் உடல்நலக் குறைவால் அவர் காலமானது தமிழக அரசியல் வரலாற்றில் பேரிழப்பாக மாறியது.
அதன்பிறகு தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் அறிஞர் அண்ணா கொள்கைகளை பின்பற்றி அரசியல் பணிகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், 1967 தேர்தல் போல, ஆட்சி மாற்றத்தை தமிழ்நாட்டில் நிகழ்த்திக் காட்ட உறுதியேற்போம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஜயை பேரறிஞர் அண்ணா புகழ்வது போன்ற ஏஐ வீடியோ இனையத்தில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கோடான கோடி உழைக்கும் மக்களின் உணர்வுமிக்க தம்பிகளின் பேராதரவை பெற்று தமிழ் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.
‘இன்று தம்பி விஜய் உன்னை அழைக்கிறேன், தம்பி வா. தலைமை தாங்க வா’. தந்தை பெரியாரை கொள்கை தலைவராக அடையாளம் காட்டிய போதே, உன் சமத்துவ அரசியலை சரியான பாதை என புரிந்து கொண்டேன். 1967ல் நடந்த அந்த ஆட்சி மாற்றம் உன்னால் 2026ல் நிச்சயம் நடக்கும். மக்கள் என்னை நம்பினார்கள்.. என் பெயரையும் என் புகைப்படத்தையும் வைத்து ஆட்சி நடத்துபவர்கள் தமிழ்நாடு முன்னேற உழைப்பார்கள் என நம்பினேன். ஆனால் அவர்கள் தன் மகன்கள் முன்னேற உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து பேசுவது உட்பட விஜய்யை புகழ்ந்து பேசும் பல வசனங்களுடன் அண்ணா, பெரியாருடன் விஜய் இருப்பது போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகி வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.