தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இ.பி.எஃப்.ஓ., சந்தாதாரர்கள் தங்களது பி.எஃப் சேமிப்பு பணத்தை யுபிஐ செயலிகள் வாயிலாக நொடிப்பொழுதில் பெற்றுக் கொள்ளும் புரட்சிகரமான புதிய வசதியை அறிமுகப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான தொழில்நுட்பச் சோதனை ஓட்டம் முன்னணி வங்கிகளுடன் இணைந்து தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இத்திட்டம் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான நீண்ட நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தொழிலாளர்களின் யுஏஎன் (UAN) கணக்குடன் பயனாளிகளின் யுபிஐ ஐடியை நேரடியாக இணைக்க இபிஎஃப்ஓ திட்டமிட்டுள்ளது. இதற்கென பிரத்யேக செயலி அல்லது பீம் (BHIM) உள்ளிட்ட யுபிஐ தளங்களுடன் இணைக்கப்பட்ட சிறப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனினும், சேமிப்புக் கணக்கில் இருக்கும் மொத்தத் தொகையையும் உடனடியாக எடுக்க முடியாது. கல்விச் செலவு, திருமணம், புதிய வீடு வாங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே, தகுதியான இருப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை யுபிஐ மூலம் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். மீதமுள்ள 25 சதவீத நிதி எதிர்காலப் பாதுகாப்புக்காகக் கணக்கிலேயே வைக்கப்பட்டு, அதற்கு வழக்கமான வரிவிலக்குடன் கூடிய வட்டியும் தொடர்ந்து வழங்கப்படும்.
இதனிடையே, அமைப்புசார் தொழிலாளர்களுக்கான கட்டாய பி.எஃப் சம்பள வரம்பு ரூ.15,000-லிருந்து ரூ.25,000-ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 12 ஆண்டுகள் கழித்து மேற்கொள்ளப்படும் இந்த முக்கிய மாற்றத்தின் மூலம், கூடுதலாக 51 லட்சம் தொழிலாளர்கள் கட்டாய பி.எஃப் வளையத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர்.
தற்போது சுமார் 30 கோடி சந்தாதாரர்களுடன் ரூ.26 லட்சம் கோடி மதிப்பிலான நிதியை நிர்வகிக்கும் இபிஎஃப்ஓ-வின் இந்த புதிய விதியால், தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் மாதாந்திரப் பிடிப்புத் தொகை ரூ.1,800-லிருந்து ரூ.3,000-ஆக உயர வாய்ப்புள்ளது. இதனால் சேமிப்பு கணிசமாக அதிகரித்தாலும், தொழிலாளர்கள் கையில் வாங்கும் நிகர மாதச் சம்பளத்தில் சற்று மாறுதல்கள் ஏற்படக்கூடும்.
Read More : வணிகர்களுக்கு குட் நியூஸ்! ஜிஎஸ்டி கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி! புது ரூல்ஸை அறிவித்த நிர்மலா சீதாராமன்!



