சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மயானங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பல்வேறு இடங்கள் தூய்மை இல்லாமல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை மாநாகராட்சி பகுதியில் உள்ள முதல் 5 மண்டலங்களில் உள்ள 67 மயானங்களும் 11ஆவது மண்டலம் முதல் 15 ஆவது மண்டலம் வரை உள்ள 88 மயானங்கள் என மொத்தம் 155 மயானங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 27 இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சியிடம் அனுமதிக் கோரப்பட்டது. 8 இடங்களில் மட்டுமே குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதால் அந்த 8 இடங்களில் பணியை மேற்கொள்ள டிட்கோ நிறுவனத்திற்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட வடக்கு அவென்யூ 26 வது தெரு, கண்ணாத்தாள் சாலை, ஆபிஸ் காலனி டி.வி.எஸ் அவென்யூ, அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பிளாக் 40 வது தெரு, ஸ்பர் டேங்க் சாலை, தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலை, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ஜெய் நகர், நடேசன் நகர் மேற்கு உள்ளிட்ட இடங்களில் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read more: சூப்பர்..! அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அவகாசம் 2026 வரை நீட்டிப்பு…!!