உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை துல்லியமாக கண்டறிய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கியமான பரிசோதனைகளில் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கின்றன. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அடிக்கடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் விளக்கம் அளிக்கிறார். எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் இரண்டிலும் அயனியாக்கும் கதிர்வீச்சு (Ionizing Radiation) பயன்படுத்தப்படுகிறது. இந்த கதிர்வீச்சுகள் உடலுக்குள் சென்று, எலும்புகள் மற்றும் உடலின் உள் உறுப்புகளின் தெளிவான படங்களை உருவாக்க உதவுகின்றன. இதன் மூலம் மருத்துவர்கள் நோய்களை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது.
பொதுவாக கதிர்வீச்சு என்றாலே பலருக்கும் பயம் ஏற்படும். ஆனால், நாம் மருத்துவ பரிசோதனைகள் மட்டுமின்றி இயற்கையாகவே தினமும் கதிர்வீச்சை எதிர்கொண்டு வருகிறோம். சூரிய ஒளி, பூமியில் உள்ள இயற்கை தனிமங்கள் மற்றும் விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் அனைத்தும் இயற்கையான பின்னணி கதிர்வீச்சு (Background Radiation) என்று அழைக்கப்படுகிறது.
ஒரு சாதாரண மனிதர் இயற்கையாகவே ஆண்டுக்கு சுமார் 3 மில்லிசீவெர்ட் (mSv) அளவிலான கதிர்வீச்சை எதிர்கொள்கிறார். ஒரு சாதாரண எக்ஸ்ரே எடுக்கும் போது சுமார் 0.1 mSv அளவு மட்டுமே கதிர்வீச்சு வெளிப்படும். இது நாம் இயற்கையாக 10 நாட்களில் பெறும் கதிர்வீச்சுக்கு சமமான அளவாகும். அதனால், தேவையான மருத்துவ காரணங்களுக்காக எடுக்கப்படும் ஒரு எக்ஸ்ரே குறித்து அதிகமாக அச்சப்பட தேவையில்லை.
ஆனால், சிடி ஸ்கேன் என்பது சாதாரண எக்ஸ்ரேவை விட அதிக அளவிலான கதிர்வீச்சை பயன்படுத்தும் பரிசோதனையாகும். பல எக்ஸ்ரே படங்களை இணைத்து உடலின் உள் பகுதிகளை முப்பரிமாண வடிவில் காட்டும் தொழில்நுட்பம் தான் சிடி ஸ்கேன். உதாரணமாக, மார்பு பகுதியில் எடுக்கப்படும் சிடி ஸ்கேனில் சுமார் 7 mSv அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இது பல சாதாரண எக்ஸ்ரேகளுக்கு சமமானதாகும். அதேபோல், வயிற்றுப் பகுதிக்கான சிடி ஸ்கேனிலும் அதிக அளவு கதிர்வீச்சு பயன்படுத்தப்படலாம்.
அப்படியானால் சிடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் ஏற்படுமா என்ற கேள்வி எழும். மருத்துவரின் விளக்கப்படி, ஒருமுறை அல்லது சில முறை சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளது. சுமார் 10 mSv அளவிலான கதிர்வீச்சு கொண்ட ஒரு சிடி ஸ்கேன் எடுத்தால் கூட, வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் மிகச் சிறிய அளவிலேயே அதிகரிக்கிறது.
ஆனால், எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி சிடி ஸ்கேன் செய்து கொள்வது சரியான பழக்கம் அல்ல. அதிக அளவில் தொடர்ந்து கதிர்வீச்சை எதிர்கொள்ளும்போது பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தேவையற்ற பரிசோதனைகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. குழந்தைகளுக்கு எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் மிகவும் அவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். தேவைப்படும் நேரங்களில் குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தும் லோ டோஸ் சிடி (Low Dose CT) போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது சிறந்தது. கர்ப்பிணிகளுக்கு மருத்துவ அவசியம் இல்லாமல் இதுபோன்ற பரிசோதனைகளை தவிர்ப்பது நல்லது.
ஒரு ஆண்டில் எத்தனை முறை எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் எடுக்கலாம் என்பதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கை எதுவும் கிடையாது. நோயின் தன்மை, நோயாளியின் நிலை மற்றும் மருத்துவ தேவையைப் பொறுத்தே இதற்கான முடிவு எடுக்கப்படுகிறது. மருத்துவத்தில் ALARA (As Low As Reasonably Achievable) என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. அதாவது, நோயை கண்டறிய தேவையான அளவு மட்டுமே, முடிந்தவரை குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
சில நேரங்களில் மூளையில் கடுமையான காயம், பக்கவாதம், மூளைக் கட்டி போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டால், நோயின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க மீண்டும் மீண்டும் ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அப்போது, ஸ்கேன் மூலம் கிடைக்கும் மருத்துவ நன்மைகள், கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகளை விட அதிகமாக இருக்கும்.
எனவே, எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவற்றை பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. தேவையான மருத்துவ காரணங்களுக்காக, தகுதியான மருத்துவரின் பரிந்துரையுடன் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனைகள் நோய்களை விரைவாக கண்டறிந்து உயிரைக் காப்பாற்ற உதவும் முக்கியமான மருத்துவ கருவிகளாகும்.



