தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலரும் வாக்குப்பதிவு செய்தனர்.. நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.. அதில் ” தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது.. தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் கண்டிப்பாக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே காவலர்கள் உள்ளே செல்ல வேண்டும்..
விதிமுறைகளை மீறும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. வாக்குச்சாவடி மையங்களில் நேரலை செய்யப்படுவதால் விதிகளை மீறுவோர் கண்டறியப்படுவர்..
வாக்குச்சாவடிகளில் விதிமீறல்கள் நடைபெறாமல் இருப்பதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.. காவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று கடமையாற்ற வேண்டும்..” என்று தெரிவித்தார்..
300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20 லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..



