செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது.
போலியோ சொட்டு மருந்து என்பது போலியோ நோயைத் தடுப்பதற்கான ஒரு தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றது. மேலும் இந்த தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. அரசு நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் இந்த முகாம்கள் காலை 9.15 மணிக்கு தொடங்குகின்றன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேசிய அளவிலான பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 69,379 குழந்தைகளுக்கு 582 மையங்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கத் தயார் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த ஒருநாள் முகாமினைச் சிறப்பாக நடத்துவதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 582 நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.



