முதல்முறை வாக்காளர்களைக் கவரவும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யவும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கவும் நிகழ்ச்சித் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல் முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆகாச வாணியின் ஒலிபரப்பு வசதி நெட்வொர்க் பற்றிய தென்மண்டல ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து மொழிகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பது அகில இந்திய வானொலியின் நோக்கம் என்றார். இதனை உணர்ந்து ரேடியோ ஜாக்கிகளும், பிரசார் பாரதி ஊழியர்களும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முன்வரவேண்டும் என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண வழிவகுக்கிறார். பிரதமர் வானொலிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இமயமலைப் பகுதி உட்பட எல்லைப்பகுதிகளில் வானொலி ஒலிபரப்புக்கான அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ரூ.2,500 கோடி நிதி வழங்கி உள்ளார்.