ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் கிடைக்குமா என்ற கவலை பலரிடமும் இருந்து வருகிறது. குறிப்பாக மாதந்தோறும் செலவுகளை சமாளிக்க, பாதுகாப்பான வருமானம் தரும் முதலீட்டு திட்டங்களை மூத்த குடிமக்கள் அதிகமாக தேடி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme – SCSS) மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
அரசாங்க ஆதரவுடன் இயங்கும் இந்தத் திட்டம், பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக வட்டியும் வழங்குவதால் ஓய்வுபெற்றவர்களுக்கு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2% வரை வட்டி வழங்கப்படுகிறது. இது பல வங்கிகளின் நிலையான வைப்புத் தொகை விகிதங்களை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பலம், முதலீடு முழுமையாக பாதுகாப்பாக இருப்பதுதான். மத்திய அரசின் ஆதரவுடன் இயங்குவதால், பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் அதிகம் உள்ளது. அதே நேரத்தில், ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி வழங்கப்படுவதால், மாதாந்திர செலவுகளுக்கு இதை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
இந்தத் திட்டத்தில் வெறும் ₹1,000 முதலீடு செய்தே கணக்கைத் தொடங்கலாம். மேலும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ் ஆண்டுக்கு ₹1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறும் வசதியும் இதில் உள்ளது.
யாரெல்லாம் சேரலாம்? 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்காக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். விருப்ப ஓய்வு (VRS) பெற்றவர்கள் 55 முதல் 60 வயதுக்குள் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதுகாப்புப் படையில் பணியாற்றிய ஓய்வுபெற்றவர்கள் 50 வயதிலிருந்தே முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் காலவரை 5 ஆண்டுகள் ஆகும். பின்னர் விருப்பமிருந்தால் கூடுதல் காலத்திற்கு நீட்டிக்கவும் முடியும். ஆனால் திட்ட காலம் முடிவதற்கு முன் பணத்தை திரும்பப் பெற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ₹20,000-க்கும் மேல் வருமானம் எப்படி? இந்தத் திட்டத்தில் தனிநபர் கணக்கில் ₹15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கில் ₹30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி உள்ளது. உதாரணமாக, ₹30 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு சுமார் ₹2.46 லட்சம் வரை வட்டி கிடைக்கும். இதன் மூலம் ஒவ்வொரு காலாண்டிலும் ₹61,500 வருமானம் கிடைக்கும். மாதாந்திர சராசரியாக கணக்கிட்டால் சுமார் ₹20,500 வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஓய்வுக்குப் பிறகு நிரந்தர வருமானம் தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு, பாதுகாப்பான முதலீடு மற்றும் நிலையான வட்டி வருமானத்தை வழங்கும் திட்டமாக SCSS பார்க்கப்படுகிறது. அதிக ஆபத்து இல்லாமல் பணத்தை சேமிக்க விரும்புவோருக்கு இது நம்பகமான தேர்வாக நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். மேலும், அருகிலுள்ள தபால் நிலையங்களில் எளிதாக கணக்கைத் தொடங்கலாம் என்பதும் இந்தத் திட்டத்தின் கூடுதல் பலனாக கருதப்படுகிறது.
Read more: கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார்..? இந்த இருவருக்கு தான் அதிக வாய்ப்பு..!



