தமிழக சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் இன்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ தமிழ் தாய் வாழ்த்துடன் ஆளுநர் உரை தொடங்கியதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆளுநர் உரை தவெக செய்தித் தொடர்பாளரின் பேச்சு போல் உள்ளது. ஆளுநரின் 37 நிமிட உரையில் 37 தவறுகள் இருந்தன. ஆளுநர் உரையில் தேன் வந்து பாயவில்லை, ஈட்டி வந்து பாய்ந்தது. ” என்று தெரிவித்தார்..
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் “ வேறு மொழியை தாய் மொழியாக கொண்ட ஆளுநர் அர்லேகரை தமிழை சரியாக உச்சரிக்கவில்லை என விமர்சிக்கக் கூடாது.
வேறு மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் நமது தலைவர்களின் பெயர்களை உச்சரிப்பதையே நாம் பாராட்ட வேண்டும். தமிழை கற்க நமது ஆளுநர் ஆசைப்படுகிறார் என்பதை நான் அவரை சந்தித்த போது அறிந்தேன். உரையில் எந்த தலைவர் பெயரையும் தவிர்க்காமல் ஆளுநர் படித்ததே பாராட்டுக்குரியது.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் “ சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சில்வர் டம்ளருக்கு பதில் கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை வைக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்.. பிளாஸ்டிக் பாட்டில் வேண்டாம், கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வைக்கலாம்..” என்று கூறினார்..
அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம் “ அண்ணியார் இங்கு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள்.. அந்த கருத்து ஏற்புடையது அல்ல. ஏனெனில் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை கொண்டு தூக்கி எறிய வாய்ப்புள்ளது..” என்று கூறினார்..
ஓபிஎஸ் கருத்தால் அவையில் சிரிப்பலை எழுந்தது.. சபாநாயகர் வாய் விட்டு சத்தமாக சிரித்தார்.. முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பலரும் வாய் விட்டு சிரித்தனர்..
அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு ” ஓபிஎஸ் தனது சொந்த அனுபவத்தில் பேசியிருக்கலாம்..” என்று கிண்டலாக சொன்னார்.
அப்போது பேசிய பிரேமலதா பாட்டிலை தான் வீச வேண்டும் என்று இல்லை, வேறு பொருட்களை கூட வீசலாம் என்று நகைச்சுவையாக பேசினார்..



